Showing posts with label திருப்பாவை. Show all posts
Showing posts with label திருப்பாவை. Show all posts

Monday, 17 December 2018

வைகுண்ட ஏகாதசி அன்று செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்





துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!

பெருமாள்  குறித்து பாடப்பட்ட  நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இப்படி கூறுகிறார் பெரியாழ்வார்.அதாவது, ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்வுற்ற காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை நம்பி வாழ்வது என்பது உலகத்தின் இயல்பே. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன். ஏனென்றால் 'ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா நீ. அதேபோல எனது கடைசி காலங்களில் ஒருவேளை நோயால் அவதிப்படும்போது,  உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன் என்கிறது பாடல் வரிகள்.

எனவே தேவரின் நாமத்தை சொல்வதால் கிடைக்கும் நன்மைகளை உணர்த்துகிறது இந்த பாடல். அப்படி தேவரின் நாமத்தை உச்சரிப்பதால் அளவற்ற நன்மைகள் கிடைக்கும். அதேசமயம் வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய தினங்களில் உச்சரிக்கும் போது மேலும் அதிகமான பலன்கள் கிடைக்கும். ஏன் வைகுண்ட ஏகாதசிக்கு இவ்வளவு சிறப்பு என்பதை பார்க்கலாம்.

ஞான எந்திரியங்கள் 5.
கர்மேந்திரியங்கள்  5.
மனசு ஒன்றையும் சேர்த்து பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம் அதாவது  (விரதம் மூலம் இறைவனிடம் நெருங்கி வருதலாகும்)
மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் வருகின்றன. 'மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது.  இதைத்தான் 'வைகுண்ட ஏகாதசி'  விரதமென மக்கள் அனுஷ்டித்து வருகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

வாழும் அவசர உலகில் மாதந்தோறும் வரும் ஏகாதசியை  அனுசரிப்பது மிகவும் நல்லது. பிரதமை திதியிலிருந்து பத்தாவது நாளான  தசமியிலும் துவாதசியிலும் ஒரே வேளை உணவைத்தான் உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து நீராடி, பூஜையில் அமர்ந்து அந்தப்பரந்தாமனை மனதில் தியானித்து வழிபடவேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள்,  பூஜையில் வைத்து நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம்.

பகலில் தூங்காமல் இருந்து, அன்றன்றைக்கு உரிய வேலைகளை கர்மசிரத்தியோடு செய்து முடிக்க வேண்டும். இரவில் விழித்து பகவானின் புகழ் பாடும் பக்திப்பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடிக்கொண்டு இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும். கண்விழித்து இருந்து பகவானின்  நாமத்தைச் சொல்லும் பாடல்கள், பஜனைகள் செய்து, ஆன்மிகக் கதைகளைப் படித்துக்கொண்டோ பாராயணம் செய்து கொண்டோ மனதை ஒருங்கிணைக்க வேண்டும்.

ஶ்ரீ ரங்கம் தொடங்கி திருப்பதி வரை உள்ள வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். இதில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் இறைவனின் அருட்கடாட்சத்தைப் பெற வரிசையில் காத்திருந்து  சொர்க்க வாசல் வழியாகச் சென்று இறையருளைப் பெறுவார்கள். மறுநாள் துவாதசி நாளில்  காலைக் கடன்களை முடித்துவிட்டு விருந்தினர்களுக்கு, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றோடு அமுது படைத்து உண்ண வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக தாயம் ஆடுவார்கள். அதற்கு பேசாமல் தூங்கி விடுவதே நன்று. ஏனெனில் எந்த வீட்டில் தாய சத்தம் கேட்கிறதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க மாட்டாள். அந்த விளையாட்டின்போது, இதோ 2 போட்டு உன் தலையை கொய்கிறேன், 4 போட்டு உன் வெட்டுகிறேன் என கூறிக்கொள்வார்கள். ஒரு தெய்வத்திற்கு உகந்த நாளில் இப்படி அபச குண வார்த்தைகளை கேட்டால் எப்படி இறவனின் அருள் கிட்டும்? சினிமாவுக்கு செல்வார்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துகொண்டே கண் விழித்திருப்பார்கள். இதுவும் தவறே. அதேபோல பரமபத விளையாட்டு ஆடும் வழக்கம் உள்ளது. இதையும் செய்யக்கூடாது.

ஏகாதசி அன்று உணவு அளிக்கவும் கூடாது. அந்த உணவை ஏற்கவும் கூடாது எனபது சாஸ்திர நியதி. ஏகாதசி நாளில் விரதம் இருப்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றிசெலுத்துவதாகும்.
இதனால் நம் மன அழுக்கைப் போக்கி எண்ணங்களை, தூய்மை அடைய செய்வது மிகவும் எளிதாகும். மனத்தூய்மை அடைந்தாலே, இனிமையான வாழ்க்கை  நமக்கு அமைந்திடும். மனம், வாக்கு செயல் மூன்றையும் ஒரே நிலையில் நிறுத்துவதுதான் ஏகாதசியின் நோக்கமாகும். மூன்றும் ஒரு நிலையில் இருக்கும்போது நாம் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறிடும்.

Monday, 10 December 2018

திருப்பாவை பாடல் 30




திருப்பாவை பாடல் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.



திருப்பாவை பாடல் 29




திருப்பாவை பாடல் 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்:

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.


திருப்பாவை பாடல் 28




திருப்பாவை பாடல் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்:

குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

விளக்கம்:

குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.


திருப்பாவை பாடல் 27




திருப்பாவை பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
நெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்:

கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். “”கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.


திருப்பாவை பாடல் 26





திருப்பாவை பாடல் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: 

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

விளக்கம்:

 பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.


திருப்பாவை பாடல் 25




திருப்பாவை பாடல் 25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்:

பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.


திருப்பாவை பாடல் 24




திருப்பாவை பாடல் 24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்:

மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்:

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.