Wednesday 14 February 2018

சென்னையில் வாழும் நிஜ 5 ரூபாய் மெர்சல்’ டாக்டர்





ஐந்து ரூபாய் கையில் இருந்தால் என்ன செய்யமுடியும்? ஒரு மாங்காய், தேங்காய் கூட வாங்க முடியாது என்கிறீர்களா. உண்மைதான் எதையும் வாங்க முடியாவிட்டாலும், தரமான மருத்துவ சிகிச்சைப் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா
ஆம், சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் கடந்த 45 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்மெர்சல் படத்தில் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டும் வாங்கும் மருத்துவராக நடித்திருப்பார் நடிகர் விஜய். சினிமாவில் மட்டுமே இது சாத்தியம். நிஜத்தில் சாத்தியமில்லை என படத்தைப் பார்த்தவர்கள் பலர் விமர்சித்தனர்.

ஆனால், அவர்களது விமர்சனங்களைப் பொய்யாக்கி கடந்த 45 ஆண்டுகளாக மிகக் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்து பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயச்சந்திரன்.
தற்போது 68 வயதாகும் ஜெயச்சந்திரன், வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருகிறார். இவரைப் பார்க்க வரும் நோயாளிகள் பெரும்பாலும் தெரு வியாபாரிகள், குப்பை அள்ளுபவர், செருப்பு தைப்பவர் என ஏழை எளிய மக்கள் தான்.
பேசுபவர்களிடம் எல்லாம் அன்பை அள்ளிக் கொட்டுகிறார் ஜெயச்சந்திரன். பாதி நோய் அவரது மருத்துவத்தில் குணமாகிறது என்றால், மீதி அவரது அன்பான வார்த்தைகளிலேயே குணமாகி விடும் போல. அந்தளவிற்கு கனிவைக் குழைத்து எல்லாரிடமும் பேசுகிறார் ஜெயச்சந்திரன்.


சென்னை கல்பாக்கம் அருகே உள்ள கொடைப்பட்டிணம் தான் நான் பிறந்த ஊர். அப்பா, அம்மா இருவருமே விவசாயிகள். படிப்பின் வாசனையே இல்லாத ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். எங்களது ஊரிலேயே முதன்முதலில் பத்தாம் வகுப்பு படித்தது நான் தான். உரிய வைத்தியம் கிடைக்காததால் பலர் உயிரிழந்த அவலத்தை நேரில் பார்த்து வளர்ந்ததால், எப்படியும் டாக்டராகிவிட வேண்டும் என்ற கனவு என்னுள் வளர்ந்தது. காசு இல்லாத காரணத்தால் மருத்துவம் யாருக்கும் எட்டாக்கனியாகிவிடக் கூடாது என்பதற்காகவே குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் ஜெயச்சந்திரன்.

மருத்துவக்கல்லூரியில் தன்னுடன் படித்த கனகவேல் என்ற நண்பருடன் சேர்ந்து, கடந்த 71-ம் ஆண்டு இந்தச் சேவையை ஜெயச்சந்திரன் தொடங்கியுள்ளார். படிப்புச் செலவிற்கே கஷ்டப்பட்ட ஜெயச்சந்திரனுக்கு கனகவேலின் அப்பா தான் கிளீனிக் வைக்க உதவியுள்ளார். ஆரம்பத்தில் வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே சிகிச்சைக் கட்டணமாக வசூலித்துள்ளனர். காலப்போக்கில் தற்போது அது ஐந்து ரூபாய் ஆகியுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால், அப்படி இலவசமாக வைத்தியம் பார்த்தால் மக்கள் மதிக்க மாட்டார்கள், எனவே இரண்டு ரூபாயாவது கட்டணமாக வாங்குங்கள் என எனது நண்பரின் அப்பா அன்புக் கட்டளை இட்டார். அதன்படி வைத்தியத்திற்கு வருபவர்களிடம் இரண்டு ரூபாய் வாங்கத் தொடங்கினோம்
ஆனால், யாரிடமும் கட்டாயப்படுத்தி காசு கேட்பதில்லை என்பதில் இன்று வரை உறுதியாக இருக்கிறேன். விருப்பப்பட்டு தந்தால் மட்டுமே காசு வாங்கிக் கொள்வேன். மற்றபடி யாரையும் காசு கேட்டு கஷ்டப்படுத்துவதில்லை,” என்கிறார் ஜெயச்சந்திரன்.

கைராசி டாக்டர்:

இவரது கைராசி காரணமாக ஏழை மக்கள் மட்டுமின்றி, வசதி படைத்தவர்கள் பலரும் இவரிடம் சிகிச்சைப் பெற வருகின்றனர். அப்படி வருவோர் வைத்தியக் கட்டணமாக ஐநூறு, ஆயிரம் தரவும் தயங்குவதில்லை. ஆனால், அவற்றை பணமாகப் பெற்றுக் கொள்ளாமல் மருந்துகளாக வாங்கித் தரச் சொல்லி, மருந்து வாங்க காசில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு அதை தருவதை ஜெயச்சந்திரன் வழக்கமாக் கொண்டிருக்கிறார் .
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும், ஆரம்பத்தில் இருந்த அதே அக்கறை, அன்பு மற்றும் சுறுசுறுப்புடனேயே நோயாளிகளிடம் நடந்து கொள்கிறார் அவர். ஒரே குடும்பத்தில் முதலில் தாத்தாவிற்கு, அப்பாவிற்கு பின் மகனிற்கு தற்போது பேரனுக்கு என நான்கு தலைமுறையாக ஜெயச்சந்திரன் வைத்தியம் பார்த்து வருகிறார்.
“நான் கற்ற மருத்துவத்தை வியாபாரமாக்க நான் விரும்பவில்லை. ஜாதி, மத, இன பேதமில்லாத கிளீனிக்கை நடத்தி வருகிறேன்.
                    மருத்துவர் ஜெயச்சந்திரன்.



No comments:

Post a Comment